என்பிலதனை வெயில் காயும்!

>> Tuesday, April 16, 2013




''உசிர் போயிருச்சு கண்ணு…….!''

ரங்கசாமி தாத்தா சொல்லிவிட்டு வீட்டுப் படியிறங்கி தளர்வாக நடந்து போனார், சொல்லும் போது அவருடைய கண்கள் கலங்கியிருந்தது. பால்ய நட்பு அவருக்கும் எங்க அப்பாவுக்கானது, எங்க அம்மாயின் கடைசி தம்பி அவர் இருவருக்கு சம வயது. எங்களுக்காக உறவாடாமல் இருந்தார்….இன்று உயிர் போனவுடன் "தானாடா விட்டாலும் தன் சதையாடும்" என்பதைப் போல காரியத்துக்கு போகின்றார். அவரை நான் தடுக்க விரும்பவில்லை!

எங்க அப்பா எங்களுக்கென்று தூணாக இருந்ததும் இல்லை; நாங்க அவருக்கு பாரமாக இருந்தும் இல்லை, எல்லாருக்கும் முதல் ஹீரோ அப்பாதான் ஆனால் எங்க அப்பா நிஜ ஹீரோ……! ஆமாம் நல்ல பிராமணச் சிகப்பு, மடிப்புக் கலையாத வெள்ளை முழுக்கைச் சட்டை, இரட்டை மடிப்பு பாலியஸ்டர் வேஸ்டி என கையில் பிரம்பு பள்ளி வரந்தாவில் நடந்து வந்தாலே பள்ளியே அமைதி காக்கும்! பாடம் நடத்துவதில் அவ்வளவு சிறப்பு பள்ளியில் சிரித்து நான் பார்த்தில்லை, ஆனால் வீட்டில் தோழனைப் போல் எங்களுடன் விளையாடுவார்…., கறி பெண்களைப் போல் மிளகு அம்மியில் அரைத்து கைப்பக்குவத்துடன் செய்வார்….வாசம் ஊரே மணக்கும்.

கைவசம் பல கதைகள் அவரிடமிருக்கும். வெயில் காலங்களில் மொட்டை மாடியில் படுத்துக் கொண்டு அப்பாவின் மார்பில் இருக்கும் அடர்த்தியான முடிகளை நிரவியபடி மெத்தை போல படுத்துக் கொண்டு கதை கேப்பேன்…! அப்படியே தூங்கி விடுவேன்…! திடகாத்திரமான அந்த மார்பு இன்று எலும்பு தெரிய இருக்குமா…? மூப்பு அந்த அழகை சிதைத்து விட்டிருக்குமா…? பழைய முகம்தான் மனதில் இருக்கின்றது இன்றைய முகம் எப்படியிருக்கும்....? அப்பாவுடன் பேசி கிட்டத்தட்ட 24 வருசம் ஆச்சு...! நான்கு ஜந்து வருடங்களுக்கு முன் ஒரு முறை ஒரு கோயில் விழாவில் பார்த்தது. பழைய கம்பீரம் இழந்து, முடி நரைத்து, வழுக்கை விழுந்து, தோல் சுருங்கி....நான் பேச மாட்டேனா...? என ஏங்கினார் நான் பார்ப்பதை கூடத் தவிர்த்தேன்.

அவருடைய அழகுதான் எங்க அம்மாவை இவரைத்தான் கட்டிக்கணும் என்று அடம் பிடிக்க வைத்திருக்குமா...? அம்மா இன்னிக்கு உயிரோடு இருந்திருந்தா.....?நான் படுத்துறங்கிய அந்த மார்பில் புரண்டு...புரண்டு...அழுதிருப்பேனோ...! இருக்கலாம்!

அம்மா கையில் ஆனந்தவிகடன்! கண்களில் நிரந்தர கண்ணாடி, குடை சகிதம் பள்ளிக்கு வருவார்... தமிழ் இரண்டாம் வகுப்பு பாட புத்தகத்தில் ஆசிரியர் குழுவில் என் அம்மா பேர் இருக்கும், மாதம் ஒன்றிரண்டு கவிதைகள் ஆனந்தவிகடனில் வந்துவிடும், புத்தகப் பிரதி தபால்காரர் கொண்டு வந்த பிறகு அதைக்காட்டி பெருமைப்படுவார்கள். மாலை பள்ளி பியூன் அனைத்து ஆசிரியர்களுக்கும் டீயும், கேக்கும் கொண்டு வந்து கொடுத்தால் எங்க அம்மாவின் கவிதை ஏதோ புத்தகத்தில் வந்திருக்கின்றது என்று அர்த்தம். சில சமயம் கோகுலத்தில் குழந்தை கதைகள், பாடல்கள், எங்க அப்பாவிக்கு கவிதை, எழுத்து கிலோ என்ன விலையென்று கேட்பார். துக்ளக் படிப்பார், இல்லை தினத்தந்தி பெரிய...பெரிய...ஆங்கில புத்தகங்களை புரட்டிக் கொண்டிப்பார் சில சமயம், தமிழ் புத்தகங்களை பெரும்பாலும் படிப்பதில்லை...!

இருவரும் அன்பாகத்தான் இருந்தார்கள் கமலா டீச்சர் வரும் வரை. பள்ளிக்கு மாற்றலாகி வந்த கமலா டீச்சர் புருசனை இழந்தவர். தனியாக வீடு எடுத்து தங்கி பள்ளிக்கு வேலைக்கு வந்து கொண்டிருந்தார்....சகஜமாக பேசத் தொடங்கிய நட்பு அடிக்கடி இரவு அப்பா காணமல் போனார், நானே பலமுறை பார்த்திருக்கின்றேன் கமலா டீச்சர் வீட்டின் முன் எங்கப்பாவின் பச்சை நிற அட்லஸ் சைக்கிள் நின்று கொண்டிருந்தை அந்த வயதில் புரியவில்லை.

அழுதாள், சண்டை போட்டாள்....அப்பா மயிரைப் பிடித்து அடித்தார் அமைதியான கூட்டை மந்தி கலைத்தது போல... தினமும் சண்டை ஒரு நாள் நான் விளையாடி விட்டு வந்த போது மண்ணெண்ணை ஊற்றி பற்ற வைத்துக் கொண்டாள் அம்மா...! ஊரே எங்க வீட்டுக்கு முன்னாடிதான் நின்றது, கருகிய உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த உடலை மருத்துவமணையில் இரண்டு நாள் வாழையிலை போர்த்தி வைத்திருந்தார்கள்....! ஒரு நடுஇரவில் எங்க அம்மாயின் ஓலம் அம்மாவின் மரணச் செய்தி அறிவித்தது அந்த ஏழு வயதில் அழக் கூடத் தோணவில்லை...!

அடுத்த சில ஆண்டுகள் அம்மா இல்லாத கவலை அம்மாயின் அரவணைப்பும் தாத்தாவின் அன்பும் மறையச் செய்தன! ஊர்க்காரர்கள் உங்கம்மா ஊருக்கே அறிவு சொல்றவ.....! இப்படி அறிவு கெட்டத்தனமா பண்ணிட்டாளே என்று அழுதார்கள், திண்டுக்கல் கஸ்தூரிபா கிராமத்தில் ஆசிரியர் பயிற்சி செய்த போது திமுகவினரின் மகள் என்பதை தெரிந்த கல்லூரி நிர்வாகம் வெளியேற்றிய போது இங்கிருந்து சென்று ஊர் காங்கிரஸ் பிரமுகர்கள் எங்க ஊர்ல மாவட்ட அளவில் முதலிடம் எடுத்த முதல் பெண் என்பதை கூறி ''அந்தப் பிள்ளை படிப்பில மண்ணைப் போடாதிங்க..!'' என்று கூறி மீண்டும் சேர்த்துக் கொண்டார்கள். அப்படியெல்லாம் படிச்சது தீயில் வெந்து சாவதற்கா...? என்று அழுதார்கள். ஏழை சனத்திற்கு சாதி தெரியாது! கிராம சனத்திற்கு எல்லாம் நம் பிள்ளை என்கின்ற பாசம்! அந்த அன்பு எத்தனை கோடி கொட்டினாலும் கிடைக்காதது.

திடீரென்று எங்கப்பா ஒருத்தியை தாலிகட்டிக் கூட்டிக்கிட்டு வந்து விட்டார் அறிவு பெட்டகம் எங்க அம்மா இருந்த இடத்தில அஞ்சாவது படித்த ஒருத்தி மனம் ஒப்புக் கொள்ளவில்லை..! திருமணத்தை ஏற்றுக் கொண்ட எங்கள் தாத்தா என்னையும் அவர்களுடன் அனுப்பினாள் தாயன்பிற்காக...! அம்மாவின் இடத்தை கடவுளாலும் நிரப்ப முடியாது....! ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் தாத்தா, அம்மாயை தேடி வந்தவன்தான் இதுவரை அப்பாவிடம் ஒரு வார்த்தை பேசியதில்லை.....!

கிழவனும்...கிழவியும் மிகவும் சிரமத்தில் எங்களைப் படிக்க வைத்தார்கள் அவர்களின் ஏழ்மையறிந்து படிப்பை விட்டுவிட்டு வேலைக் போகத் தொடங்கினேன்...எந்த துன்பத்திலும் எங்கப்பா எங்களை வந்து பார்க்கவேயில்லை தன் மனைவி, தன் குழந்தை என்று எங்களை மறந்து போனார். இன்று பணி ஓய்வுக்கு பிறகு இதே ஊரில் ஒரு வீட்டை வாங்கி அடுத்த தெருவில் வசிக்கின்றார்...!

காரியத்திக்கு போகலாமா வேண்டாமா....? மனம் அலை பாய்ந்தது...! உயிரோடு இருக்கும் வரை அந்த உறவு எங்களுக்காக என்ன செய்தது இன்று பிணமாக...! ஆனால் ஏழு எட்டு வயிசிலேயே எங்கப்பா என் மனசில இருந்து இறந்து விட்டார், இது யாரோ...? போகக் கூடாது என்று வைராக்கியத்துடன் உள் அரையில் போய் படுத்துக் கொண்டேன். ஆனால் காரணம் புரியாத துக்கம் மனதை அழுத்தியது. அழுகை வந்துவிடும் போல் இருந்து.....

தூரத்தில் பறையொலி கேட்டது..!

5 comments:

திண்டுக்கல் தனபாலன் 5:10:00 AM  

இது உண்மையா அல்லது கதையா...? நெகிழ வைத்தது...

/// ஏழை சனத்திற்கு சாதி தெரியாது! கிராம சனத்திற்கு எல்லாம் நம் பிள்ளை என்கின்ற பாசம்! அந்த அன்பு எத்தனை கோடி கொட்டினாலும் கிடைக்காதது. ///

100% உண்மை வரிகள்...

Philosophy Prabhakaran 11:38:00 AM  

கதை சூப்பர்...

சீனு 12:08:00 AM  

உண்மையை தொட்டு சொ(செ)ல்வது போல் அமைந்த கதை - அருமை

திண்டுக்கல் தனபாலன் 3:05:00 AM  

Visit : http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_27.html

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP